கேட்டவை கிடைக்குமிடம்:

Monday, April 19, 2010

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! பேதமற்ற இடம்தான் மேலான- திருப்தியான இடம்!


திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாடு (16.4.2010, சென்னை) பல புதிய அம்சங்களின் கம்பீரத்தோடு நடைபெற்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் குறித்த நேரத்தில் தடம் பதித்தது தனிச்சிறப்பாகும்.

இடைவெளியில்லாமல் அடர்த்தியாக நிகழ்ச்சிகள் பின்னப்பட்டு இருந்தாலும், அத்தனையும் தட்டுத்தடங்கலின்றி அம்பாரி யானையாக நடைபோட்ட மாட்சி _ காட்சிக்கும், கருத்துக்கும் நல்விருந்தாகும்.

இசை நிகழ்ச்சி என்று ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் தனியாக நடத்திடாமல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னரும் கழகத் தோழர்கள் தக்க பின்னணி இசைக் குழுவினருடன் கொள்கைப் பாடல்களைப் பாடியது _ வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் அமைந்திருந்தது.

தொடர்ந்து சொற்பொழிவைக் கேட்கும்போது கருத்துகளை உள்வாங்கிக் கொள்வது என்பது உளவியல் ரீதியாகக் கடினம்தானே!

இடை இடையே சற்று இளைப்பாறிக் கொள்ள இந்த இசை முழக்கம் இன்பத் திண்ணையாகவேயிருந்தது. (பாடல்களும் கொள்கையைச் சார்ந்ததுதானே!).

நமது கழகத் தோழர்கள் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் சு. சிங்காரவேலு, மயிலாடுதுறை அருள்தாசு, புவனகிரி யாழ்.திலீபன் ஆகிய தோழர்கள் நறுக்கெனத் தேர்ந்தெடுத்த கொள்கைப் பலாச்சுளைப் பாடல்களை இடை இடையே தேன் கலந்து பாடி பார்வையாளர் சமுத்திரத்தை மகிழ்வித்தனர்.

மாநாடு தொடங்குமுன் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அம்மா சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்தனர். அங்கிருந்த ஈ.வெ.கி. சம்பத் சாலை வழியாக பெரியார் திடலில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவிக்க அணிவகுத்து வந்தனர். அம்மா சிலை முதல் அய்யா சிலை வரை மாணவர்கள் பட்டாளம் அணிவகுத்து வந்த அந்தக் காட்சியைக் காண கண்கள் கோடிவேண்டும்.

திராவிட இயக்கத்தின் மாணவர் அமைப்புகள் நசிந்துவிட்டன என்று ஆர்.எஸ்.எஸ். ஏடான தினமணியில் கட்டுரை ஒன்று வெளிவந்தது.

அதற்குப் பலத்த பதிலடி கொடுக்கும் பட்டாளமாக திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள் சென்னையில் திரண்டனர்.

சென்னைக்குள் நுழையும் அத்தனைத் திசைகளிலும் குறிப்பாக மேம்பாலங்களில் கழகக் கொடி ஆயிரக்கணக்கில் பட்டொளி வீசிப் பறந்தன.

எத்தனைக் கொடிகள் பறந்தாலும், திராவிடர் கழகக் கொடியின் வண்ணமும், அமைப்பும் தன்னைத் தனித்தன்மையாகக் காட்டும் கம்பீரம் வாய்ந்ததாயிற்றே!

வைகறை இருட்டையும்

செங்கதிர் நகைப்பையும்

திராவிடர் மணிக்கொடி குறிக்கும்

வாழ்விருள் தவிர்ப்பதோர்

தனிப் பெரும் புரட்சியை

வரவேற்றல் கொடியின் நோக்கம்

என்று கழகக் கொடிபற்றி புரட்சிக்கவிஞர் பாடினார்.

தனிப்பெரும் புரட்சியை வரவேற்றல் அதன் நோக்கம் என்ற முறையில், எல்லாத் திசைகளிலும் கழகப் பட்டாளத்தினரை வரவேற்பதுபோல திடமாகப் பறந்தது.

எந்த ஒரு மாநாட்டிலும் இதுவரை இந்தளவு இல்லை என்கிற அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கழகக் கொடிகள் தலைநகர மக்களையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

காலையிலேயே பெரியார் திடல் கருங்கடலாகக் காட்சியளித்தது!

இயக்கத்திற்கு அடுத்த தலைமுறை இதோ தயாராகிவிட்டது என்ற நன்னம்பிக்கையை _ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

பார்ப்பனர்களின் பாசறை என்று பேசப்படும் விவேகானந்தா கல்லூரியிலிருந்தெல்லாம் மாணவர்கள் திரண்டது _ ஒரு புதிய புயல் மய்யம் கொள்ள ஆரம்பித்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகும்.

விவேகானந்தா கல்லூரியின் மாணவர் வீர. சுவீன் எம்.ஏ., (எம்.பில்.,) தான் மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றுவித்து எழுச்சிமிகு உரையை நிகழ்த்தினார்.

முற்பகல் மாநாட்டுத் தலைவர் தோழர் சென்னியப்பன் (சென்னை சட்டக்கல்லூரி மாணவர், கழக மாணவரணியின் மாநிலத் துணைச் செயலாளர்) முதல் கருத்துப் போர் நடத்திய மாணவத் தோழர்கள் த.வீ. இளந்திரையன் பி.ஏ., ஏ.பி. இளங்கவின் பி.ஈ., கு. கருணாகரன் வரை ஆற்றிய உரைகளில் ஆவேசம் மட்டுமன்றி அணி அணியான கருத்துகள் வந்து வீழ்ந்து கொண்டே இருந்தன.

ஈரோடு தமிழன்பன்

கவிஞர் ஈரோடு தமிழன்பன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதன் அவர்களின் அருமையான மாணவர். தமிழ் மறவர் புலவர் அண்ணாமலை (வழக்கறிஞர் அருள்மொழியின் தந்தையார்) போன்றவர்களும் அவரின் மாணாக்கரே!

பேராசிரியர் இராமநாதன் அவர்களிடம் பயின்ற மாணவர்கள் பெரும்பாலோர் பகுத்தறிவுப் பாசறைக்கான நல்முத்துகள்தான்.

இதில் ஈரோடு தமிழன்பன் (இயற்பெயர் செகதீசன்) குறிப்பிடத்தக்கவர். சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர்.

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டை தன் பெயருக்கு முன்னாள் தம்மை அடையாளப்படுத்தும் முகவரியாகப் பொருத்திக்கொண்டவர்.

கருஞ்சட்டை மாணவப் பட்டாளத்தின் எடுப்பைக் கண்டு கவிஞர் மனங்குளிர்ந்தார் _ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பரம்பரையாயிற்றே _ இருக்காதா?

தந்தை பெரியார் கருத்துகள் உலக மயமாக்கப்படவேண்டும் _ காரணம் பகுத்தறிவுப் பகலவனின் கருத்துகள் ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ மட்டும் சொந்தமல்ல _ அவரின் மண்டைச் சுரப்பு உலகுக்கே தேவையானது என்று அழுத்தமான கருத்தினைப் பதிவு செய்தார்.

முற்பகல் மாநாட்டின் நிறைவுரையை நிகழ்த்திய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், திராவிடர் மாணவர் கழகம் அதன் தோற்றம், வளர்ச்சி குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் வீரமணி

ஒரு வரலாற்றுக் குறிப்பு என்று பார்க்கும்பொழுது, நீதிக்கட்சி என்று கூறப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் கண்டது. 27.8.1944 _ சேலம் 16 ஆவது நீதிக்கட்சி மாநாட்டில்தான்.

ஆனால், தாய்க் கழகமான திராவிடர் கழகம் அதிகாரப்பூர்வமாக பிறப்பெடுக்கு முன்பே, சேய் அமைப்பான திராவிடர் மாணவர் கழகம் 19.2.1944 அன்றே குடந்தையில் பிறந்துவிட்டது என்பது ஒரு வித்தியாசமான தகவல்தான்.

சேலம் அரசினர் கல்லூரியில் பார்ப்பனர்களுக்கு ஒரு தனித் தண்ணீர்ப் பானை; பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப் பானை என்று இருந்த கொடுமையை எதிர்த்து மாணவர் பட்டாளம் எழுந்ததன் விளைவே திராவிடர் மாணவர் கழகம்; அதன் தொடர்ச்சியே குடந்தை மாநாடும்கூட!

தோழர்கள் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி கடைசி மூச்சு அடங்கும்வரை கொள்கைச் செம்மல்) முதலியோர் மாணவர் கழகத்தின் சிற்பியாவார்கள்.

கல்லூரிகளில் மட்டுமல்ல, நீதிமன்றங்களில் கூட பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப்பானை வைக்கப்பட்டு இருந்த அநீதியைத் தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். (திராவிடர் மாணவர் கழகத்தின் மாநில செயலாளராக இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்).

குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கு என்று வைக்கப்பட்ட தனித் தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்டது. அந்தத் தன்மான உணர்ச்சியின் வெளிப்பாடே திராவிடர் மாணவர் கழகமாகும்.

இரயில்வே நிலைய உணவு விடுதிகளில்கூட பிராமணாள், இதராள் என்றிருந்த வேறுபாடு தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் ஒழிக்கப்பட்டது (1941, மார்ச் 21).

பேதமற்ற இடமே மேலான _ திருப்தியான இடமாகும் (குடிஅரசு, 11.11.1944) என்றார் தந்தை பெரியார்.

திராவிடர் கழகத்தின் கொள்கைச் செறிவுக்கான சுருக்கமான குறள்தான் இது.

சென்னை திராவிடர் மாணவர் கழகத்தின் பத்து தீர்மானங்களின் அடிநாதம்கூட இந்த அடிப்படையில்தான்.

- (வளரும்)

மின்சாரம்





No comments:

Post a Comment