கேட்டவை கிடைக்குமிடம்:

Wednesday, April 28, 2010

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! ஆரியம் அண்டா பெருவெடிப்புத் தத்துவம்!


மாணவர் கழக எழுச்சி மாநாட்டின் தொடர்ச்சி-யாக மாலையில் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவில் திறந்தவெளி மாநாடாக நடைபெற்றது (16.4.2010).

மாநாட்டில் பெரியார்_ களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் நான்கு (1929 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளுக்குரியது) வெளியிடப்பட்டன. இதையும் சேர்த்து 1925 முதல் 1930 வரை 11 குடிஅரசு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

காலத்தின் கருத்துக் கண்ணாடியான குடிஅரசு தொகுப்பு ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் அணி செய்யவேண்டியது மட்டுமல்ல _ ஒவ்வொரு பக்கமும் படிக்கப்பட வேண்டியது _ இன்னும் சொல்லப்-போனால் மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகளும் உண்டு.

மனப்பாடம் செய்யும் ஒரு முறையைப் பார்ப்-பனியம் வகுத்துக் கொடுத்தது _ கண்மூடித்தனமாக ஆன்மிகக் குழியில் விழுவதற்கு; அந்தக் குழியிலிருந்து மீள்வதற்கு இந்த மனப்பாடங்கள் தேர்ந்தெடுத்த கனமான ஊன்றுகோல்கள் ஆகும்.

1949 ஆம் ஆண்டு வரைக்கான பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுப்புகள் மிக விரைவில் அனைத்தும் வெளிவந்து _ புதிய தலைமுறையினர் மிகச் சிறந்த வெளிச்சத்தைக் கொடுக்கப் போகிறது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் குடிஅரசு தொகுதிகளை வெளியிட, வணக்கத்-திற்குரிய சென்னை மேயர் ம. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் நவாஸ்கனி குடிஅரசு தொகுதிகளைப் பெற்றுக்-கொண்டார்.

சைதை பகுதியில் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய அந்த இளைஞர்தான் இன்றைய சென்னை மேயர் என்பது பெருமைக்-குரியதாகும்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடி-யாதது. இந்நாளை என்றும் நான் மறவேன்.

இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்-டேன், களித்தேன். அவற்றைக் காண கண்கோடி வேண்டும்.

மாணவர் மத்தியில் திராவிடர் இயக்கத்திற்குச் செல்வாக்கில்லை என்று சொல்பவர்கள் இந்த மாநாட்டைக் கண்ட பிறகு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்றார் மேயர்.

நமது ஆசிரியர் அவர்கள் எங்கு பேசினாலும் அங்கெல்லாம் மாணவர் பருவத்தில் சென்று கேட்டவன் நான். பகுத்தறிவு இயக்கத்தில் நான் ஈடுபட காரணமாக இருந்தவர் நமது ஆசிரியர்தான் என்று குறிப்பிட்டார்.

சென்னை மாநகர வணிக நிறுவனங்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை. தமிழ்நாட்டு வீதியில் தமிழ்தான் இல்லை என்று அன்று புரட்சிக்கவிஞர் பொங்கி எழுந்தார்.

வாணிகர் தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்கிலமா வேண்டும்? மாணுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்லவேண்டும் என்றார் புரட்சிக்கவிஞர் தமிழியக்கத்தில். அதனைச் செயல்படுத்தும் நோக்கில் மே 31 ஆம் தேதிக்குள் மாநகரத்தில் உள்ள அத்தனை வணிக நிறுவனங்களிலும் பெரிய எழுத்துக்களில் தமிழில் எழுதவேண்டும் என்று ஆணை பிறப்பித்திருப்பதை மேயர் அவர்கள் எடுத்துச் சொன்னபொழுது, பெரிய ஆரவாரம்!

வடசென்னை மக்களவை உறுப்பினரும், தத்துவமேதை டி.கே. சீனிவாசன் அவர்களின் அருமை மைந்தனும், சிறந்த கொள்கைவாதியுமான டி.கே.எஸ். இளங்கோவன் ரத்தினச் சுருக்கமாக தமது உரையில் சில முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்.

திராவிடர் இயக்கத்திற்கு வாரிசு இல்லாமல் போக-வில்லை என்பதற்கு இந்த மாநாடு எடுத்துக்காட்டு என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார்.

தந்தை பெரியார் கொள்கைக்கோ, இயக்கத்துக்கோ சரிவு ஏற்பட்டுவிட முடியாது.

விவாதத்துக்காக, இந்தக் கொள்கைக்குச் சரிவு ஏற்படுகிறது என்று சொன்னால், அது தந்தை பெரியா-ருக்கோ, இந்த இயக்கத்திற்கோ சரிவு என்று பொருள் அல்ல _ இந்தச் சமுதாயத்துக்கு ஏற்பட்ட சரிவு என்று பொருள், என்று மிகச் சரியாகக் கணித்துச் சொன்னார்.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன் உரையில் தனது பொதுவாழ்வு பெரியார் திடலிலிருந்து தொடங்கிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பை தமிழர் தலைவர் அருளியதாகப் பெருமைப்பட குறிப்பிட்டார். நானே சென்று அடைக்கலம் அடைந்த இடம் பெரியார் திடல் _ பாசறை என்பதை நன்றியுணர்ச்சியுடன் புலப்-படுத்தினார்.

பெரியார் திடலும், வாசகர் வட்டமும் மாணவப் பரு-வத்தில் தம்மைச் செம்மைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

நான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்-கையை ஏற்றுக்கொண்டவன். பின்பற்றுபவன் என்றாலும், நமக்குப் பெரியாரியலே அடிப்படை என்பதை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்தார்.

மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய விழாவில் தமிழர் தலைவர் கூறிய ஒரு கருத்தை மிக முக்கியமாகக் கருதி அதனை இம்மாநாட்டில் வலி-யுறுத்தினார்.

திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இம்மூன்றும் திரிசூலங்கள் அல்ல_ முத்தமிழ் என்று இலக்கிய நயத்துடனும், கொள்கை நயத்துடனும் மறை-மலை நகர் விழாவில் தமிழர் தலைவர் சொன்னதை முதல்வர் கலைஞர் வழிமொழிந்து அதே விழாவில் பேசினார். அதை இந்த மாநாட்டிலும் தாம் வலியுறுத்து-வதாகக் குறிப்பிட்டார் எழுச்சித் தமிழர்.

இது ஒரு மிக முக்கியமான கருத்தாகும். தமிழ்-நாட்-டுக்கு மட்டுமல்ல _ இந்தியத் துணைக் கண்டத்துக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்பது உலகளாவிய கருத்தாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்-மையினர் ஒன்று சேருவதன் மூலமாகத்தான் தலைவிரித்தாடும் நீண்ட கால சமுதாயக் கொடுமைக்கான விடுதலை கிடைக்கும்.

மறைமலை நகர் விழாவும், சென்னை திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநாடும், இந்தக் கருத்தை காலம் கருதி மீண்டும் பதிவு செய்தது என்று சொல்லவேண்டும்.

தமிழர் தலைவர்

நிறைவுரையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சில முத்துக்களைப் பதித்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களும் மிகவும் அரியவை. இந்தக் காலகட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவை.

1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி, இதுவரை நிறை-வேற்றப்பட்ட அத்தனைத் தீர்மானங்களும் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாக, திட்டங்களாக மலர்ந்ததை தமிழர் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இயக்கம் மாணவர் இளைஞர்களின் பாசறை என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இளைஞர்களை சட்டமன்றத்துக்கு அழைக்கக்-கூடிய இயக்கமல்ல _ மாறாக சிறைச்சாலைக்கு அழைக்கக்கூடியது என்று கூறியபோது, ஆரவார-மான வரவேற்பு!

இந்தியாவில் நிகழும் மனுதர்மக் கண்ணோட்-டத்தைப் பொருத்தமாக எடுத்துக்காட்டினார். மாவோயிஸ்டுகளைத் தீவிரவாத இயக்கம் என்று கூறி நடவடிக்கைகளை எடுக்கிறார்களே, மதவாதம் என்ற பெயரால் தீவிரவாத அரசியலை நடத்திவரும் சங் பரிவார், பி.ஜே.பி.மீது அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்ற வினாவை எழுப்பினார்!

சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப் பகலில் பல்லாயிரவர் கூடி அடித்து நொறுக்கியவர்கள் தீவிரவாதிகளா? பயங்கரவாதிகளா? 18 ஆண்டுகள் ஓடிய பிறகும் குற்றவாளிகள் ராஜநடை போட்டுத் திரிவதைத்தான் தமிழர் தலைவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.

காவல்துறை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறினாலும் கருஞ்சட்டைப் பட்டாளம் மதவாதக் கும்பலை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டும் என்று கம்பீரமாகச் சொன்னார்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மாணவரணி தலைவர் தி.இர. சிவசாமி நன்றியுரையுடன் இரவு 10.30 மணிக்கு எழுச்சிமிகு மாநாடு நிறைவுற்றது.

குறுகிய காலத்தில் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் தேர்வும் நிறைவு பெறாத காலகட்டத்தில், தமிழ்நாடு தழுவிய அளவில் மாணவர்கள் பொங்கி வந்தனர் _ பெரியார் என்னும் பெருங்கடலின் அலைகள் ஓயப் போவதில்லை _ புயல்களை உரு-வாக்கும். தேவைப்பட்டால் பிற்போக்குச் சக்திகளை விழுங்கும் சுனாமிகளையும் தோற்றுவிக்கும்.

இனமானத்துக்குத் திராவிடர்!

மொழி மானத்துக்குத் தமிழர்!

இந்த இரட்டைக் கிளவித் தத்துவம்தான் ஆரியம் அண்டாப் பெருவெடிப்புத் தத்துவம்.

மாணவர் கழக மாநாட்டின் செய்தி இதுதான்!


- மின்சாரம் -

No comments:

Post a Comment